‘ஈரானுடன் எட்டப்படவுள்ள புதிய உடன்படிக்கைக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கோடும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் குறிக்கோளுடனும் முன்னெடுக்கப்பட்ட ‘புறொஜெக்ட்ப்ரீடம்’ இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
இருப்பினும், ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் முற்றுகைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தனது ‘ரூத்’ சமூக தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளின் கோரிக்கைகளையும், தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ள உடன்படிக்கைகளின் முன்னேற்றத்தையும் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திட முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக, குறுகிய காலத்திற்கு இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்,’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ‘புறொஜெக்ட் ப்ரீடம்’ நடவடிக்கை காரணமாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவியதுடன், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், ஹோர்முஸ் நீரினையில் கப்பல் போக்குவரத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், ‘மிகவும் கடுமையான மற்றும் அழிவுகரமான’ பதிலடி கொடுக்கப்படும் என்று வாஷிங்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
