கபில சந்திரசேனவின் மரணத்தில் சந்தேகம்: நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கொழும்பு கொள்ளுப்பிட்டிய, பேதிரிஸ் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இன்று 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கபில சந்திரசேனவின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.

குறித்த வீட்டின் அறையொன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று முற்பகல் கொழும்பு தடயவியல் மருத்துவ அதிகாரியும் அந்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்.

இச்சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கையில், இதனை ஒரு சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சம்பவ இடத்தைப் பார்வையிட கோட்டை நீதவான் பசன் அமரசேனவும் வருகை தந்திருந்தார்.

2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக 06 எயார்பஸ் ஏ-330 மற்றும் 08 எயார்பஸ் ஏ-350 ரக விமானங்களை கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டது. ​

இது தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்து, 2020 இல் இவர்களைக் கைது செய்தது.

பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றங்கள் வெளிப்பட்டதால், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசாரணைகளைத் தொடங்கியது.

இது தொடர்பாக கடந்த மார்ச் 12ஆம் திகதி கபில சந்திரசேன மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குறித்த 2 மில்லியன் டொலர் பணத்தில் 20 மில்லியன் ரூபாயை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், 60 மில்லியன் ரூபாயை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் வழங்கினார் என கபில சந்திரசேன வாக்குமூலம் அளித்ததாhர் எனக் குறிப்பிட்டனர்.

எனினும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமது கட்சிக்காரரை அச்சுறுத்தி இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளார் என கபில சந்திரசேனவின் சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விசாரணைக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேன, 54 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆம் திகதி நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், பிணை நிபந்தனைகளை நிறைவேற்றும்போது தனது உறவினர்கள் என இருவரைப் போலியாக முன்னிலைப்படுத்தினார் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைத் தகர்த்ததற்காக, கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று 7ஆம் திகதி வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே, இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles