த.வெ.க. தலைவர் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி முறைப்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக, விஜய்க்கு அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநருக்கு பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என விஜய்யிடம் ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில், விஜய்க்கு பா.ஜ.க. நெருக்கடி கொடுப்பதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டி.ஜி.பியிடம் சென்னை மேற்கு காங்கிரஸ் தலைவரும் கவுன்சிலருமான டில்லிபாபு முறைப்பாடு செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது, த.வெ.க. தலைவர் விஜய்யும் அவரது கட்சியின் வேட்பாளர்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக மக்கள் எதிர்பார்த்த இந்த வெற்றியை உறுதிசெய்து, விஜய் அமைக்கவுள்ள நிலையில், அவருக்கு எதிராக பா.ஜ.க. நெருக்கடி கொடுத்து வருவதுடன், அரசியல் சூழ்ச்சியும் செய்து வருகின்றனர்.
விஜய்க்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் நிலையில், அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அவருக்கும் விஜய்யுடன் கைகோர்த்திருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
