வரலாற்று சிறப்பு மிக்கதும் பாடல் பெற்ற தலமுமான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று – மே 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இன்றைய தினம் அதிகாலை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து உபயகாரர்களுக்கான பத்திரிகையும் காளாஞ்சியும் திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபைச் சேர்ந்த திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் குடும்பத்தினரிடம் காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டு கையளிக்கப்பட்டதுடன், பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆலய பிரதம குருக்கள், ஆலய திருப்பணிச் சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் மே 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி எதிர்வரும் 20ஆம் திகதி எடுத்துச் செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

