நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம்

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க., வி.சி.க., இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டன போராட்டம் நடத்தின.

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு திராவிடர் கழகம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த போராட்டத்துக்கு திராவிடர் கழகம், தி.மு.க., வி.சி.க., இடதுசாரிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இன்று சென்னை எழும்பூரில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் கருத்து வெளியிட்ட திக தலைவர் கி.வீரமணி, “நீட் தேர்வில் மிகப் பெரிய ஊழல் நடக்கிறது. நீட் தேர்வை ஒழிக்காமல் ஊழலற்ற அரசு என பாஜக எப்படி சொல்ல முடியும். அரசியல் சட்டத்துக்கு மிகவும் விரோதமானதுதான் நீட் தேர்வு. நீட் தேர்வே ஒரு மோசடிதான், சட்ட விரோதம் தான். நீட் விவகாரத்தில் மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

விசிக தலைவர் திருமாவளவன், “நீட் தேர்வின் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மதிப்பில்லாமல் ஆகிவிட்டது.
இப்போது நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் அதிகமாகிவிட்டன. இதனால் நீட் தேர்வு வணிகமயமாக மாறிவிட்டது. நீட் தேர்வின் மூலம் எளிய மக்கள் மருத்துவ கல்வி பெற முடியாது. மருத்துவ படிப்புக்கு நீட் பயிற்சி நிறுவனங்களை நாடினால் போதும் என, வசதியுள்ளவர்களுக்கான படிப்பாக அதனை மாற்றிவிட்டார்கள்.

நீட் தேர்வால் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களின் கொள்ளையை தடுக்க முடியவில்லை. நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது. தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என சட்ட மசோதாவை நிறைவேற்றிய பின்னரும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இப்போது நீட் வினாத்தாள் கசிந்ததை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டுள்ளார்” என்று கூறினார்.

மதுரை, திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர், திண்டிவனம், விழுப்புரம் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இன்று நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles