காஸாவுக்கு உணவுப் பொருட்களை கொண்டு சென்றபோது இஸ்ரேல் படைகளால் கைது செய்யப்பட்டார் என்று கருதப்படும் இலங்கை பெண் தொடர்பில் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மனித உரிமைகள் செயல்பாட்டாளரான சமீராவை விடுதலை செய்ய இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மே 19ஆம் திகதி வெளிவிவகார அமைச்சின் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனத்தின் காஸாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டுசென்ற சர்வதேச ‘குளோபல் சுமுத்’ கப்பல் குழுவின் படகுகள் இஸ்ரேலிய கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இடைமறிக்கப்பட்டது.
அந்தப் படகில், இலங்கை பெண்ணான சமீரா மஹ்பூப்தீன் உட்பட 250இற்கும் மேற்பட்ட சர்வதேச செயல்பாட்டாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
காஸாவில் வாழும் சுமார் 20 இலட்சம் மக்களுக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள், நிவாரணங்களை வழங்குவதற்காக, சுமார் 45 நாடுகளைச் சேர்ந்த 400இற்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்களுடன் 54 படகுகள் அண்மையில் துருக்கியிலிருந்து புறப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
