மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த குழு முன்னிலையில் நாளை மே 21ஆம் திகதி முன்னிலையாகுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
மாகாண சபைகள் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் தங்களது ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்குமாக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் கூடியிருந்தது.
இதேவேளை, அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களமும் இந்த விசேட குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. இதன்போது, மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட ரீதியான தடைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவால் அறிவுறுத்தப்பட்டது.
