உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தால் தமது தேவைக்கேற்றவாறு திட்டமிட்டபடி திசை திருப்புகிறது என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு – பத்தரமுல்லையில் சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலையில் இருந்தபோது அவரை சட்டபூர்வமாக சிறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே சந்தித்தோம். அவ்வாறு இருக்கையில் மக்கள் பணத்தை வீணடித்துக்கொண்டு பிரான்ஸுக்குச் சென்று அவரை இரகசியமாக சந்திக்கவேண்டிய தேவை எமக்கோ அல்லது ராஜபக்ஷக்களுக்கோ கிடையாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிகளுக்கு தற்போதைய அரசில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் தீவிர உறுப்பினர்களாக செயல்பட்டவர்கள் என்பதுடன், தாக்குதல்காரரின் தந்தை ஜே.வி.பி-யின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் என்பதும் வெளிப்படையானது.
தாக்குதல் கோப்புகளை மூடிமறைத்தவர்களிடமே தற்போது விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டு ராஜபக்ஷக்களையும் பிள்ளையானையும் இதில் தொடர்புபடுத்துவதற்காக பிரான்ஸுக்குச் சென்று வாக்குமூலங்களைப் பெறும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதன்மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளின் இறுதிப் பின்னணி ஜே.வி.பி-யிடமே இருப்பது தெளிவாகிறது. தேர்தல் காலங்களில் சர்வதேச நாடுகளின் தொடர்புகள் மற்றும் சான்றுகள் தம் வசம் இருக்கின்றன என்று கூறியவர்கள், தற்போதைய தங்களது ஆட்சியில் ஏன் அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை – என்றும் கேள்வி எழுப்பினார்.
