தையிட்டி வீதி விவகாரத்தில் ஜூன் 25ஆம் திகதி தீர்ப்பு

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என்று கோரி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலான கட்டளை எதிர்வரும் ஜூன் 25ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

குறித்த கட்டளை இன்று வியாழக்கிழமை வழங்கப்படும் எனக் கடந்த 11ஆம் திகதி நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போதே, ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்குவதாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

முன்னதாக, தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதி காணப்படுகிறது. குறித்த வீதியை விடுவிக்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது.

வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்றவேண்டும். தவறும் பட்சத்தில் பிரதேச சபை வேலியை அகற்றும் அத்துடன், வேலியை அகற்றும் செலவினத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்கவேண்டும் என்று தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்திருந்தார்.

இதையடுத்து, பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாக பலாலி பொலிஸில் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம், தவிசாளரை பலாலி பொலிஸார் அழைத்து, வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையில் பிரச்னைகள் ஏற்பட்டு, நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே, வேலியை அகற்றும் பணிகளை கைவிடவேண்டும் என்று மிரட்டும் பாணியில் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு தவிசாளர், மறுப்பு தெரிவித்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என்று பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles