மாகாண சபை தேர்தலை ஒழிக்கும் சூழலை அரசாங்கம் உருவாக்குகிறது – சுரேஷ் சாடல்!

மாகாண சபை தேர்தலை நடத்தாமல் ஒட்டு மொத்த மாகாண சபை முறைமையையே இல்லாமல் செய்வதற்கான சூழலைத் தற்போதைய அரசாங்கம் தோற்றுவித்து வருகின்றது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘மாகாண சபைகள் தேர்தலைத் தமது அரசு நடத்தும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில்இ பாராளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே. வி. பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தல் 2027ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் எனக் கூறியுள்ளமை கண்டிக்கத்தக்கது.

‘மாகாண சபைத் தேர்தலுக்காகக் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப் பட்ட நிதியானது, ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டு விட்டதால், இந்த வருடம் தேர்தல் நடத்தப்படமாட்டாது என ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியிருந்தால், அது பாராளுமன்றத்திலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஜனாதிபதியோ, அமைச்சரவைப் பேச்சாளரோ பேச வேண்டிய விடயங்களை, அரசில் எந்தப் பதவியும் இல்லாத ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், தானே அரசை நடத்துவது போன்ற தொனியில் பேசுவது பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, அது பலமுறை கூடி ஆராய்ந்து வரும் பின்னணியில், ரில்வின் சில்வாவின் இந்த அறிவிப்பு தேர்தல் முடக்கச் சதியை வெளிப்படுத்துகிறது. தமிழ் மக்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்குப் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

வடக்கிலாவது மாகாண சபை தேர் தலை நடத்திக் காட்டுங்கள் பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூட அரசுக்குப் பகிரங்க சவால் விடுத்திருந்தார். முழு நாட்டிலும் தேர்தலை நடத்த முடியாவிட்டாலும் வடக்கு, கிழக்கில் மட்டும் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்குப் பெரும் நிதி தேவைப்படாது. இந்தச் சூழலில் தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து அழுத்தங்களைக் கொடுக்கத் தவறினால் தமிழர் விரோதச் செயற்பாடுகளுக்கு நாமும் துணைபோவதாக அமைந்துவிடும் – என்றும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles