யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டார் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
46 வயதான பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற மரண தண்டனை கைதியே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அதன்பின்னர் இந்த தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
