மன்னார் – முள்ளிக்குளத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ஆயிரத்து 12 ஏக்கர்களில் 753 ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
படையினரின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடந்த கலந்துரையாடலிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
விடுவிக்கப்படும் காணிகளில் காடழிப்புகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்காக வனவளத் திணைக்களத்திடமே அந்தக் காணிகளை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையிருப்பின், அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானங்களை உரிய அமைச்சுக்கு அனுப்பி வைக்கின்றபோது அந்தக் காணிகளை மக்களுக்கு விடுவித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்றும் தெரிவிக்கப்பட்டது.
