நோர்வே செஸ் போட்டி அந்நாட்டின் ஒஸ்லோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3ஆவது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார். இந்த ஆட்டம் 31ஆவது நகர்த்தலின் போது சமநிலையில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற ஆர்மகெடான் சுற்றில் அலிரேசா ஃபிரோஸ்ஜா வெற்றி பெற்றார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீரரான மக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இதில் 46ஆவது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இதன் வாயிலாக பிரக்ஞானந்தா முழுமையாக 3 புள்ளிகளை பெற்றார். 7 முறை சாம்பியனான கார்ல்சனுக்கு நடப்பு தொடரில் இது 2ஆவது தோல்வியாக அமைந்தது. கிளாசிக்கல் போட்டியில் நோர்வே செஸ் தொடரில் மக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது 2-வது முறையாகும்.
கடந்த 2024ஆம் ஆண்டு தொடரிலும் கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தார். 3 சுற்றுகளின் முடிவில் அலிரேசா ஃபிரோஸ்ஜா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், அமெரிக்காவின் வெஸ்ஸி சோ 4 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், குகேஷ் 3.5 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் 3 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும், மேக்னஸ் கார்ல்சன் 1.5 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளனர்.
