அம்புலன்ஸ் சாரதியாகப் பணியாற்றும் 29 வயது இளைஞர் ஒருவர், தனது காதலியின் 2 வயது பச்சிளம் மகன் முகமட் ஹெய்டர் என்பவரை மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் இன்று தெமர்லோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட முகமட் இக்பால் ஃபித்ரி மஸ்லான் (வயது 29) மீதான இந்தக் கொலைக் குற்றச்சாட்டு, மாஜிஸ்திரேட் அனிஸ் அத்லினா அபு ஜோஹான் முன்னிலையில் வாசித்துக் காட்டப்பட்டது. எனினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வருவதால், இன்று மாஜிஸ்திரேட்டிடம் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
நீதிமன்றக் குற்றப்பத்திரிகையின்படி, அம்புலன்ஸ் ஓட்டுநரான இக்பால், கடந்த மே 11ஆம் திகதி காலை 9:00 மணியளவில், ‘தாமான் செபெராங் தெமர்லோ இண்டா 2A’ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 2 வயது சிறுவன் முகமட் ஹெய்டர் அப்துல் முக்மினை மிகக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மே 13ஆம் திகதி அந்த 2 வயது சிறுவன் சுயநினைவற்ற நிலையில் சுல்தான் ஹாஜி அகமட் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆரம்பத்தில் இச்சம்பவம் ஒரு ‘குழந்தை வதை’ என்ற கோணத்திலேயே பொலீஸாரால் விசாரிக்கப்பட்டது.
எனினும், உயிரிழந்த சிறுவனின் உடலைத் துல்லியமாகப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள், அச்சிறுவனின் தலையில் மிகக் கடுமையான மற்றும் பலத்த ஆயுதங்களால் தாக்கப்பட்ட அதிர்ச்சி ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை உடனடியாகக் கொலை வழக்காக (Murder) மாற்றிய போலீசார், கடந்த மே 20ஆம் திகதி சிறுவனின் தாயையும், அவளது காதலனான அம்புலன்ஸ் ஓட்டுநர் இக்பாலையும் தெமர்லோவில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இக்கொலை வழக்கு ஜாமீனில் வெளிவர முடியாத ஒன்று என்பதால், அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் அத்ரியானா அஸ்ரின் குற்றவாளிக்குக் கடுமையான பிணை மறுப்பை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வரும் செப்டம்பர் முதுலாம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்துள்ளது.
மலேசியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் (கொலைக்குற்றம்) இக்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், இவருக்குக் கட்டாய மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படச் சட்டத்தில் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
