பீஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.
பீஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து பின்னர் கட்டடம் முழுவதும் வேகமாக பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீ அணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் காந்தேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தீ விபத்து சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நிஷாந்த் தெரிவித்துள்ளார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் சாம்ராட் சவுத்ரி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
