சிவகுமாரனின் நினைவேந்தலை கட்சி பேதங்கள் கடந்து கடைப்பிடிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தான தியாகி பொன். சிவகுமாரனின் நினைவுதினத்தை கட்சிபேதங்கள் கடந்து – தொடர்ந்து நினைவுகூரவேண்டும் – இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் வல்வெட்டித்துறை நகர பிதா எம். கே. சிவாஜிலிங்கம்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் அகிம்சை – ஆயுதவழி – ஜனநாயக வழியென நீண்ட பங்களிப்பை கொண்டவர் எம். கே. சிவாஜிலிங்கம். நோயுற்ற நிலையிலிருக்கும் அவர் சிவகுமாரனின் 52ஆவது ஆண்டு நினைவேந்தல் தினமான இன்று வெள்ளிக்கிழமை நினைவுப்பகிர்வு ஒன்றை வெளியிட்டார். அதிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், சிவகுமாரன் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குறிப்பாக தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். நாம் பாடசாலை மாணவர்களாக இருந்தபோது அவரின் தலைமையில் பல போராட்டங்களில் பங்கேற்றிருந்தோம். மருதனார்மடத்திலிருந்து பாதயாத்திரையாக யாழ்ப்பாணம் நகரம் வரை சென்றிருக்கிறோம்.

தமிழாராய்ச்சி மாநாட்டின் படுகொலைகள் அவரை உலுக்கியது. இதைத் தொடர்ந்தே அங்கு காவல் பணியிலிருந்த பொலிஸ் அதிகாரிகள்மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டார். இதேபோன்றே துயைப்பாவையும் கொலை செய்ய முயன்றார். அவர் தேடப்படும் நிலையில் இந்தியா செல்ல முனைந்தார். அப்போது மயிலிட்டியை சேர்ந்த ஒருவரால் ஏமாற்றப்பட்டார்.

அவர் வீரச்சாவடைய முன்னர் ஒரு வாரத்துக்கு முன்பாக அவரை கடத்தல் படகில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய முனைந்தோம். ஆனால், தனியாகச் செல்ல முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். இதன் பின்னரே அவர் சயனைட் அருந்தி உயிரிழந்தார்.

அவருடைய இறுதி ஊர்வலத்தின்போது பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் மயானத்துக்கு வந்ததும் இதன்போதுதான். பின்னர், சிவகுமாரனுக்கு சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலையை தொடர்ந்து வைக்கப்பட்ட 4 சிலைகள் உடைக்கப்பட்டன. விழவிழ எழுவோம் என்பதுபோல சிலையாக எழுந்து இன்றும் நிமிர்ந்துநிற்கிறான் சிவகுமாரன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது உயிர்த் தியாகியான பொன். சிவகுமாரனின் நினைவுதினத்தை கட்சிபேதங்கள் கடந்து – தொடர்ந்து நினைவுகூரவேண்டும். இதன் மூலமாகத்தான் எதிர்கால சந்ததிக்கு தமிழின விடுதலை உணர்வை – வரலாறுகளை ஊட்டிச் செல்ல முடியும் – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles