கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
பீல் பிராந்திய பொலிஸாரின் தகவலின்படி, சண்டல்வுட் பார்க்வே, கிரவுன் விக்டோரியா டிரைவ் சந்திப்பிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த ஒருவரை கண்டறிந்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் குறைந்தது இரண்டு ஆண் சந்தேக நபர்கள் தொடர்புடையவர்களாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவர்கள் கறுப்பு ஆடைகளை அணிந்திருந்தனர் என்றும் நான்கு கதவுகள் கொண்ட கறுப்பு நிற செடான் ரக காரில் தப்பியோடினர் எனவும் கூறப்படுகிறது.
பீல் பிராந்திய பொலிஸ் ஊடகத் தொடர்பு அதிகாரி டைலர் பெல் கூறுகையில்,
இது வீட்டுக்குள்ளேயே நடந்த திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டின் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தாக்குதலுக்குள்ளான நபர்தான் இலக்கா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.
உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடும்பத்தினருக்கு மரியாதை அளிக்கும் வகையில் மேலதிக தகவல்கள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை – என்றார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
