பிரிட்டன் வரலாற்றிலேயே மிக நீண்ட மற்றும் பரபரப்பான விவாகரத்து வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வர்ஷா கோகுல் தொடர்பான வழக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
வர்ஷா கோகுல் 2002ஆம் ஆண்டு தனது கணவர் பத்ரேஷ் கோகுலிடமிருந்து விவாகரத்து பெற்றபோது 2.7 இலட்சம் பவுண்ஸ் மற்றும் ஒரு காரை மட்டுமே ஜீவனாம்சமாக பெற்றிருந்தார். ஆனால், தனது கணவர் சொத்துக்களை மறைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் நீண்ட சட்டப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், பத்ரேஷ் கோகுல் நைஜீரிய முன்னாள் ஆளுநருடன் இணைந்து சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டதும் மில்லியன் கணக்கிலான சொத்துகளை மறைத்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து 2011ஆம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வர்ஷா கோகுல் தனது பழைய விவாகரத்து ஜீவனாம்ச வழக்கை மீண்டும் திறக்க முயன்றார். 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி வழங்கியது.
விசாரணையின்போது, இரு தரப்பும் கடுமையான வாதங்களை முன்வைத்த நிலையில், உயர் நீதிமன்றம் தற்போது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதி வில்லியம்ஸ், பத்ரேஷ் கோகுலை ஏமாற்றுக்காரர் என குறிப்பிடும் வகையில் கடுமையாக விமர்சித்ததுடன், அவரது சொத்துகளில் சட்டபூர்வமாகக் ஈட்டப்பட்ட சுமார் 85 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை வர்ஷா கோகுலுக்கு ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் 23 ஆண்டுகளாக நீடித்த இந்த விவாகரத்து சட்டப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கு பிரிட்டன் சட்ட வரலாற்றில் மிகவும் நீண்ட மற்றும் முக்கியமான குடும்ப வழக்குகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது
