பெண்ணை கடத்தி சித்திரவதை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம், 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. லண்டன் வான்ட்ஸ்வொர்த் பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியான ககன்தீப் சிங் (34), எனும் நபருக்கே மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம், தாய்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு மர்ம பொருட்கள் அடங்கிய பயணப்பெட்டியை கொண்டு வருமாறு 24 வயது இளம்பெண் ஒருவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், பர்மிங்காம் விமான நிலையம் வந்திறங்கிய பெண்ணை முகமூடி அணிந்த கும்பல் காரில் கடத்திச் சென்றது.
மேற்கு லண்டனின் ஹேன்வெல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண், ஒரு நாளுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். பெண்ணை , நிர்வாணப்படுத்தியும், சாட்டையால் அடித்தும், உடலில் சூடு வைத்தும் சித்திரவதை செய்ததோடு, ககன்தீப் சிங் இரண்டு முறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மிரட்டலுக்கு அஞ்சாமல் அந்த பெண் தனது தாயிடம் இது குறித்து தெரிவித்தார். பொலிஸார் நடத்திய சோதனையில், பெண்ணின் உடையில் இருந்த 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய மரபணு தடயங்கள் மூலம் ககன்தீப் சிங் பிடிபட்டார்.
ஏற்கனவே வேறொரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்காக லண்டன் ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றம் அவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் சந்தேக நபர் தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய முடியாதவாறு இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்லதாகவும் கூறப்படுகின்றது.
