புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பை நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.
அதேவேளை உயர் நீதிமன்றினால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று நேற்று விடுதலை செய்தது.
புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட் பார் முறையில் அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசி மகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அதன்போது 09 எதிரிகளுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
” ட்ரயல் அட் பார் ” தீர்ப்பாய முறைமையிலான விசாரணைகள் நடைபெற்று தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் 27ஆம் திகதி இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியாதமையால், இருவர் விடுதலை செய்யப்பட்டதுடன் , ஏனைய ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்தும் 30 வருடச் சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தது.
குறித்த தீர்ப்பை எதிர்த்து 07 பேரும் உயர்நீதிமன்றில் மேன் முறையீடு செய்ததை அடுத்து, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், விசாரணை நடைபெற்ற காலப் பகுதியில் மரண தண்டனை கைதிகளில் ஒருவரான பூபாலசிங்கம் தவக்குமார் என்பவர் சிறையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
ஏனைய 06 பேருக்கான விசாரணைகளில் இருவர் மீதான தண்டனையை நீக்கி, ஏனைய நான்கு பேரின் தண்டனையை கடந்த மே மாதம் 06ஆம் திகதி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் , தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களின் தீர்ப்பை மீளவும் உறுதி செய்வதற்காக குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் கடந்த 25ஆம் திகதி அழைக்கப்படவிருந்த நிலையில், மரண தண்டனை கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
அதனால் குறித்த வழக்கு அன்றைய தினம் மேல் நீதிமன்றில் அழைக்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் அழைக்கப்பட்டபோது, மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஏனையவர்களான தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன் மற்றும் மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ் குமார்) ஆகிய நால்வரும் பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்நிலை ஊடாக மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பை மேல் நீதிமன்றம் வாசித்து தண்டனையை உறுதி செய்தது.
அதேவேளை குறித்த வழக்கில் இருந்து உயர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட மகாலிங்கம் சசிதரன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகியோர் மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
