
நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.30 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான அவசர தேவைப்பாடுகள் மற்றும் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை அரசின் சார்பில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் இந்தக் கலந்துரையாடலில் நேரடியாகப் பங்கேற்றிருந்தனர்.
நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுடன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.சிறீபவானந்தராஜா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதானி மகேஷ் கட்டுலந்த ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதிலும், அவர்களின் வாழ்வாதார மற்றும் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் உள்ள நடைமுறைச் சாத்தியங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
