அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதலை திட்டமிட்டிருந்தது அந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள எண்ணெய் வளங்கள், மின்னணு நிலையங்கள் மீது வார இறுதியில் கடுமையாக தாக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதனால் மேற்காசியாவில் மோதல் தீவிரமடையும் சூழல் இருந்தது. இந்நிலையில், அந்த தாக்குதல் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.
“ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது. அந்த தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பார்க்காத அதிதீவிர தாக்குதலாக இருக்கும். அதற்கு அமெரிக்கா தயார்.
“இருப்பினும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஈரான் தரப்பிலிருந்து நமக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் தாக்குதலை தற்காலிமாக ரத்து செய்கிறேன். விரைந்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டுமென்ற நிபந்தனை உடன் இதை ஏற்றுள்ளேன். எனது இந்த முடிவில் இஸ்ரேலும் இணைந்துள்ளது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று காலை தெரிவித்தார்.
அமெரிக்காவின் தாக்குதல் திட்டத்தை நிறுத்துமாறு சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் மோதல் வெடித்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் தாக்குதலை இடைக்காலமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார். இதனால் கடந்த ஜூலை 24-க்கு பிறகு இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபடவில்லை என தகவல்.
ஆனால், கடந்த வியாழக்கிழமையில் இருந்து அந்த சூழல் அப்படியே அங்கு மாறியது. இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.
கடந்த தினங்களுக்கு முன்னர் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. அதை தங்களது வான் பாதுகாப்பு கவசம் இடைமறித்து அழித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. அதையடுத்து அமெரிக்காவின் பதிலடி தீவிரமாக இருந்தது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளும் இதற்கு உதவின. ஈரானின் உள்கட்டமைப்பு வசதிகளை அமெரிக்கா தாக்கி வந்த நிலையில் ட்ரம்ப் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
