ரஷ்யா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மற்றும் அராவ் கடல் ஆகியவற்றின் மீது உக்ரேனிய ராணுவம் 900 இற்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது. அவை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“திங்கள்கிழமை மாலைக்கும் செவ்வாய்க்கிழமை காலைக்கும் இடையில் 600 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மொஸ்கோவின் மேல் பறந்தன. அவற்றில் பெரும்பாலானவை தொலைவிலிருந்து அழிக்கப்பட்டன.
மொஸ்கோவை நெருங்கிக் கொண்டிருந்த 105 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன” என்று மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறினார்.
மொஸ்கோ பிராந்தியத்தில் உள்ள ஒரு முக்கிய எரிபொருள் கிடங்கில் டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில், ரஷ்யா ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாக தனக்கு உளவுத் தகவல் கிடைத்திருப்பதாக கூறிய அவர் அதற்குப் பதிலடி நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
