அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவிட்டால் ஈரான் மீது மீண்டும் பெரிய அளவிலான இராணுவ தாக்குதல்களை நடத்த அமெரிக்க படைகள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே போதுமான அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், புதிய தாக்குதல்களை விரைவாகத் தொடங்க முடியும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை.ஈரானின் ராடர்கள், ஏவுகணை ஏவுதளங்கள் உள்ளிட்ட ராணுவ இலக்குகள் மீது மட்டும் தாக்குதல் நடத்தாமல், அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்களையும் குறிவைக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் விரிவான திட்டங்களைத் தயாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் முடிந்த பிறகு, ஈரான் மீதான புதிய தாக்குதல்களுக்கு டிரம்ப் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஈரானும் ஹவுதி கிளர்ச்சிப் படையினரும் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறையும் கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மட்டுமின்றி, அதற்கு அப்பாலும் தாக்குதல்கள் விரிவடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்காசியாவில் மீண்டும் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
