பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தனது பதவியை நாளை திங்கட்கிழமை ராஜினாமா செய்யவுள்ளார் என ‘த ஒப்சேவர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் ஸ்டாமரின் தலைமைப் பதவிக்கு எதிராக கடந்த சில மாதங்களாக எழுந்து வந்த அழுத்தங்கள், கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீரென அதிகரித்துள்ளது. சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.
பிரதமரின் அரசியல் போட்டியாளரான அன்டி பர்ன்ஹாம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாக தெரிவாகியுள்ளார்.
இதன் மூலம் ஸ்டாமரின் தலைமைப் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக சவால் விடுக்கும் தகுதியை அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பதவி விலகல் குறித்து ‘செக்கர்ஸ்’ இல்லத்தில், தனது மனைவியுடன் ஸ்டாமர் ஆலோசித்து வருவகிறார் எனவும், திங்கட்கிழமையன்றே அவரது எதிர்காலம் குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என தொழிற் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், இடதுசாரி கொள்கையுடைய தொழிற்கட்சியைப் பெருவாரியான இடங்களுடன் வரலாற்று வெற்றிக்கு கெய்ர் ஸ்டாமர் வழிநடத்தினார்.
எனினும், அடுத்தடுத்து அரங்கேறிய பல்வேறு ஊழல் முறைப்பாடுகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக அவரது மக்கள் செல்வாக்கு கடுமையாகச் சரிந்தது.
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாக அளித்த வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்ற முடியாது என்ற எண்ணம் வாக்காளர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் பதவி விலகும் முடிவை எடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
