முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக, இன்டர்போலின் விசேட உதவியைப் பெற்றுக்கொள்வதற்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பொலிஸ் தலைமையகமும் உத்தியோகபூர்வ பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
அவர் நீதிமன்றங்களில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினாலும் மாத்தறை பிரதம நீதவான் நீதிமன்றத்தினாலும் பிறப்பிக்கப்பட்டுள்ள இரண்டு விசேட பிடியாணை உத்தரவுகளுக்கு அமைவாகவே இந்த சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துக்குச் சொந்தமான ஏழு தசம் எட்டு மில்லியன் ரூபாய் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது 12,000 ரி-சேர்ட்டுகளை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் இவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன சி.ஐ.டியின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அண்மையில் கட்டளையிட்டிருந்தார்.
அத்துடன், மாத்தறை எலியகந்த வீதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை கொள்முதல் செய்த விவகாரத்தில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் அவருக்கு எதிராக மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்கவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவச் சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்காவில் தங்கியிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ள போதிலும், நீதிமன்றங்களை அவர் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் அதே கடுமையான சர்வதேசச் சட்ட பொறிமுறைகளும், இன்டர்போல் விசேட சிவப்பு அறிவித்தல்களும் அரசியல் தராதரங்களைப் பாராது நீதிமன்றங்களால் தேடப்படும் முன்னாள் அமைச்சர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராகச் சமமாகப் பயன்படுத்தப்படும் எனத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
