தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் சுமுகமான சந்திப்பு நடைபெற்ற போதிலும், அந்தச் சந்திப்பில் திட்டவட்டமான – விசேடமாகக் குறிப்பிடத்தக்க – தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்று தெரியவருகின்றது.
வழமை போல கருத்துப் பரிமாற்றங்களை அடுத்து வாய்மொழி மூல உறுதிமொழிகள் சிலவற்றுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது எனச் சந்திப்பில் பங்கு பற்றிய கட்சிகளின் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளின் பிரதிநிதிகளே இன்று ஜனாதிபதியை அவரது செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
வழமை போல் புதிய அரசமைப்பு திருத்தத்துக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகள் அவர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்ற அரசின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என்று கூறிய ஜனாதிபதி, இராணுவத்தின் கைவசம் உள்ள அத்தகைய காணிகளை விடுவிப்பதில் என்ன நெருக்கடி என்பது குறித்து இராணுவத்திடம் தாம் அறிக்கை கோரியிருக்கின்றார் என்றும் அது கிடைத்ததும் அவ்விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
மலையக மக்களுக்கு காணிகளைப் பகிர்ந்து அளிப்பதில் சில நெருக்கடிகள் இருக்கின்றன என்று சொன்ன ஜனாதிபதி, மலையகத் தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் இவற்றில் இறுக்கமான நிலைப்பாட்டில் இருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை என்ன முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் நிறுவப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவு கிடைத்ததும் தேர்தல் நடத்தப்படும் என்றார் ஜனாதிபதி.
இந்தத் தெரிவுக்குழுவின் செயற்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இது காலத்தை இழுத்தடிக்கும் வேலை என்றும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் ஒரே குரலில் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்புக் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலக முன்றிலில் வைத்து ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
“தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் குழுவாக ஜனாதிபதியைச் சந்தித்து, அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுகளை நடத்தினர்.
இந்தச் சந்திப்பின் போது புதிய அரசமைப்பைக் கொண்டுவருவது தொடர்பான வாக்குறுதிகள் சுட்டிக்காட்டப்பட்டன. அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, சிறிய தாமதம் ஏற்பட்ட போதிலும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல் இதுவரை நடத்தப்படாமை குறித்து கேள்வி எழுப்பியபோது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை வந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்தத் தெரிவுக்குழுவின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கே அது பயன்படுத்தப்படுவதாகவும் நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
இதனையடுத்து, தெரிவுக்குழுவின் தலைவருடன் இது குறித்து நேரடியாக ஆலோசித்து உரிய தீர்வை வழங்குவார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் இராணுவத்தினராலும் ஏனைய அரசு நிறுவனங்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கொள்கை ரீதியாக அந்த நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உடன்பட்டிருந்தாலும், நடைமுறையில் தாமதம் நிலவுவது குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டது. நிலங்களை விடுவிப்பதில் உள்ள தடைகள் குறித்து இராணுவத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
இவற்றுடன், மலையக மக்களுக்குச் சொந்தமான காணி உரிமை இன்னமும் கிடைக்கப் பெறாத நிலைமை குறித்தும், தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்டு மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்பட்ட போதிலும், அதற்கான முறையான பதில்களோ தீர்வுகளோ இன்னமும் எட்டப்படவில்லை.” – என்று எம். ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
