இரு நாடுகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை நீக்கவும், நம்பிக்கையை அதிகரிக்கவும், முக்கிய விவகாரங்களை முறையாகக் கையாளவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா் என்று சீனா அறிவித்துள்ளது.
டில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி.
இரு நாடுகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை நீக்கவும், நம்பிக்கையை அதிகரிக்கவும், முக்கிய விவகாரங்களை முறையாகக் கையாளவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா் என்று சீனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா கூறியிருப்பதாவது: பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தில்லி சென்ற சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி, இந்திய பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா். அப்போது அவரிடம், இந்திய, சீன தலைவா்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட முக்கிய முடிவுகளை அமல்படுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக இருப்பதாக வாங் யி தெரிவித்தாா்.
அதேபோல், இரு நாடுகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை நீக்குதல், நம்பிக்கையை அதிகரித்தல், முக்கிய விவகாரங்களை முறையாகக் கையாளுதல் ஆகியவற்றிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக இருப்பதாக பிரதமா் மோடியிடம் வாங் யி குறிப்பிட்டாா்.
பரஸ்பரம் பயனளிக்கும் துறையில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கவும், சீனா-இந்தியா உறவுகளில் சாதகமான அம்சங்களை தொடா்ந்து பராமரிக்கவும் சீனா விரும்புவதாகவும் வாங் யி கூறினாா்.
பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக 2027-ஆம் ஆண்டில் சீனா பதவியேற்கவுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, தற்போதைய தலைவரான இந்தியா தனது பொறுப்புகளை செய்து முடிக்க சீனா தொடா்ந்து ஆதரவளிக்கும் என்றும், பிரிக்ஸ் அமைப்பின் உறுதியான வளா்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தியாவுடன் இணைந்து சீனா செயல்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா் என்று சின்ஹுவா தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டத்தில் வாங் யி கலந்து கொண்டது குறித்து செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், பேச்சுவாா்த்தை நடத்தவும் இதுவே சரியான நேரம் என்றாா்.
2020-ஆம் ஆண்டில் இந்தியா- சீனா வீரா்கள் இடையேயான கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தை தொடா்ந்து, லடாக் எல்லையில் இரு நாடுகளும் 4 ஆண்டுகளுக்கு படைகளைக் குவித்தன. எனினும், பிறகு நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன. மேலும், இந்தியா, சீனா இடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை இரு நாடுகளும் கடந்த ஓராண்டாக எடுத்து வருகின்றன.
