அமெரிக்காவைச் சேர்ந்த அமேசன் நிறுவனம், நடப்பாண்டு முதல் 2030 வரையிலான 4 ஆண்டுகளில் மொத்தம் 48 பில்லியன் டொலர் (சுமார் ரூ4.53 லட்சம் கோடி) முதலீடு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அமேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) அன்டி ஜாஸி நேற்று நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமருடனான இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுடனான அமேசனின் நீண்டகால உறவை அன்டி ஜாஸி மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக கூடுதலாக 13 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்படும் என ஜாசி தெரிவித்தார்.
இதன் மூலம், 2026-2030 காலகட்டத்தில் ஏஐ மற்றும் கிளவுட் துறையில் அமேசானின் ஒட்டுமொத்த முதலீடு 21 பில்லியன் டொலரைத் தாண்டும் (இது ஒட்டுமொத்த 48 பில்லியன் டொலர் முதலீட்டின் ஒரு பகுதியாகும்).
பிரதமரைச் சந்தித்த பின் ஆண்டி ஜாஸி கூறுகையில், “ஒரு தசாப்தத்துக்கு முன்பு நாங்கள் இந்தியாவில் கால் பதித்தோம். ஒன்லைன் வர்த்தகம், ஏஐ மற்றும் கிளவுட் துறைகளில் இந்திய மக்களின் ஆதரவு அபாரமானது. பிரதமர் மோடியின் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ மற்றும் ‘சுயசார்பு இந்தியா’ ஆகிய தொலைநோக்கு பார்வைகளால் நாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளோம். இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் அமேசான் என்றும் ஒரு நீண்டகால பங்காளியாகத் தொடரும்,” என்றார்.
