
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ரூ.300 மில்லியன் செலவில் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன Cath Lab பிரிவு இன்று (27) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் சிறப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த புதிய பிரிவு, இதய நோய்களை விரைவாகக் கண்டறிந்து சிறந்த சிகிச்சை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியின் மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் 11 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், இதய சிகிச்சைக்காக இனி கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்களது பிராந்தியத்திலேயே சிகிச்சை பெற முடியும்.
இதய இரத்த நாளங்களுக்கான கொரோனரி அஞ்சியோகிராம் (Coronary Angiography), அஞ்சியோபிளாஸ்டி (Angioplasty), ஸ்டெண்ட் (Stent) பொருத்துதல், இதய வால்வு தொடர்பான சிகிச்சைகள், இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான சிறப்பு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள்.
இந்த நவீன வசதியின் முக்கிய சிறப்பு, திறந்த இதய அறுவை சிகிச்சையின் தேவையை பல சந்தர்ப்பங்களில் குறைத்து, நோயாளிகளுக்கு குறைந்த காயத்துடன், பாதுகாப்பாகவும் விரைவாகவும் சிகிச்சை வழங்கும் திறன் கொண்டதாகும்.
இதனுடன், சுமார் ரூ.30 மில்லியன் மதிப்பிலான அதிநவீன Echo இயந்திரம், மேலும் Suction கருவி, Multi Monitor, Syringe Pump, Infusion Pump உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் சக்கர நாற்காலிகளும் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன
