கல்முனைக்குடி பிரதான வீதியில் நேற்று (27) சனிக்கிழமை மாலை கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வந்த ‘சுப்பிரமணியன்’ எனும் வாயில்லா ஜீவனை (நாயை) காலால் உதைத்த நபர் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாயில்லா ஜீவனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூரமான செயல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விலங்குகளிடமும் அன்பும் இரக்கமும் காட்ட வேண்டிய மனிதநேயம் மறைந்து வரும் இக்காலகட்டத்தில், கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் நாய்க்கு அஷ்ரப் வைத்தியசாலை (மடுவத்தை) அருகில் பழக்கடை நடத்தும் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மனிதநேயத்திற்கு எதிரான செயல் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்முனை பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
