பிரித்தானிய கடற்படையின் பழமையான போர்க்கப்பல்களுக்குப் (Destroyers) பதிலாக, தானியங்கி அமைப்புகளைக் (Uncrewed systems) கட்டுப்படுத்தும் மையங்களாகச் செயல்படக்கூடிய ஆறு பொதுப் போர்க் கப்பல்களை (Common Combat Vessels – CCV) கொள்முதல் செய்ய பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
பிரிட்டிஷ் கடற்படையின் தற்போதைய 6 ‘டைப் 45’ (Type 45) ரக போர்க்கப்பல்கள் 2038 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளன.
ஆரம்பத்தில் அவற்றுக்குப் பதிலாக அடுத்த தலைமுறை ‘டைப் 83’ (Type 83) ரக கப்பல்களைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ், டிரோன் போர்க்கலை மற்றும் முன்னணிப் படைத் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த அதிநவீன ஹைப்ரிட் (Hybrid) ரக ‘பொதுப் போர்க் கப்பல்கள்’ (CCV) தற்போது மாற்றாகக் கொண்டுவரப்படவுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புச் செயலர் டான் ஜார்விஸ் வெளியிட்ட அறிக்கையில்,
அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஹைப்ரிட் கப்பல்களை இந்த பொதுப் போர்க் கப்பல்கள் நமது கடற்படை வீரர்களுக்கு வழங்கும்.
சிறந்த பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர்களுடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த புதிய கப்பல்கள், நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், நவீன போர்க்கலைக்குத் தேவையான திறனை பிரிட்டன் கடற்படைக்கு வழங்கும் – என்று தெரிவித்துள்ளார்.
இந்த CCV ரக கப்பல்கள் வான்வெளி, கடல் பரப்பு மற்றும் ஆழ்கடல் ஆகிய மூன்றிலும் இயங்கும் மனிதரில்லா டிரோன் அமைப்புகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல்கள் 2030களின் முற்பகுதியில் இருந்து விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
