இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 668 ஆக உயர்வடைந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் டெங்கு பரவலின் தீவிரம் கணிசமாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் புதிதாக 1,253 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை சுகாதாரத் துறையினர் மத்தியில் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே மிக அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 811 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 443 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு பரவல் அபாயம் தீவிரமடைந்துள்ள சூழலில், பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சூழலில் நுளம்புகள் (கொசுக்கள்) பெருகும் இடங்களை முழுமையாக அழித்து, தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் மீண்டும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
