கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு பகுதியைச் சேர்ந்த அம்புலன்ஸ் ஒன்று, கனரக சரக்கு லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு அவசர மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஒரு நோயாளி என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெல்ரோஸ் பகுதியில் உள்ள ‘ரூட் 16’ நெடுஞ்சாலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கன்ஃபெடரேஷன் பாலத்தில் இருந்து சுமார் 10 நிமிட தொலைவில் ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு லொறியுடன் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் அம்புலன்ஸை ஓட்டிச் சென்ற வாரன் குரோவ் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஓட்டுநர், மாண்டேக் பகுதியைச் சேர்ந்த 77 வயது பெண் நோயாளி மற்றும் நைன் மைல் கிரீக் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் மருத்துவ உதவியாளர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லொறியை ஓட்டி வந்த ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ள போதிலும், அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
