மேற்கு வங்க பாலியல் படுகொலை சம்பவம்: கைதான முக்கிய நபர் என்கவுண்டரில் கொலை

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான பிரவாஷ் மண்டல் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பருய்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பருய்பூரில் உள்ள ஒரு குளத்தில் சாக்குப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குற்றத்தில் ஈடுபட்டுவர்களைக் கைது செய்து கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிலர், ரயில் தண்டவாளங்கள் மற்றும் காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தினர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பிரவாஷ் மண்டல், ஆனந்த சர்தார், திவாகர் சர்தார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். கபீர் மொல்லா என்ற நபரும் பிடிபட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபராகக் கருதப்பட்ட பிரவாஷ் மோண்டல், சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்று நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த விதத்தை அறிந்து கொள்ளும் அந்த நடவடிக்கையின்போது, பிரவாஷ் மண்டல், போலீஸாரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் பிரவாஷ் மண்டல் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆனந்த சர்தார், திவாகர் சர்தார் ஆகியோர் பதுங்கி இருந்த இடத்துக்கு பிரவாஷ் மண்டல் சிறுமியை அழைத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வகையில், சிறுமிக்கு எதிரான கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகியவை திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அவர்கள் சிறுமியை ஒரு சாக்குப்பையில் அடைத்து குளத்தில் வீசி உள்ளனர். அப்போது சிறுமி உயிருடன் இருந்திருக்கலாம் என்றும், ஏனெனில், சிறுமியின் நுரையீரலில் தண்ணீர் இருந்தது என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகள் ஒருவர் கூட தப்பிக்க முடியாது என்றும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்றும் முதல்வர் சுவேந்து அதிகாரி கூறி இருந்தார்.

மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை 72 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்க காவல்துறை தலைவர் சித்தநாத் குப்தாவை அவர் அறிவுறுத்தி இருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles