நாடாளுமன்றக் கட்டடம், உள்துறை அமைச்சின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு ஆகிய இரண்டையும் குறிவைத்து போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
40 வயது கோ ஜாய் ஷியாங் கடந்த வெள்ளிக்கிழமை (3 ஜூலை) இணையவழி அறிவியல், தொழில்நுட்ப அமைப்பிற்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
அமைப்பு செயல்படும் கட்டடத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அனைவரும் உடனே வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறியதாக நம்பப்படுகிறது.
திங்கட்கிழமை (6 ஜூலை) அன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் வெடிகுண்டு இருப்பதாய்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு அவர் மின்னஞ்சல் அனுப்பினார் என சந்தேகிக்கப்படுகிறது.
இரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸாருக்கு தகவல் தரப்பட்டது.
பொலிஸார் நடத்திய சோதனையில் பாதுகாப்பு அக்கறைக்குரிய பொருள்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இரு மிரட்டல்களையும் விடுத்தவர் ஒரே நபர் தான் என்று நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கோவிற்கு 7 ஆண்டுவரை சிறை, 50,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது
