ஜோர்தான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நால்வர் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
ஜோர்தானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமான தளம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ ட்ரோன் கட்டுப்பாட்டு மையம் மற்றும் குவைத்தில் உள்ள அலி அல் சலீம் உள்ளிட்ட விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. வளைகுடா நட்பு நாடுகள் பலவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஈரானை கட்டுப்படுத்தும் வகையில், துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி ஈரானின் பல இடங்களில் தாக்குதல்களை நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் தென்மேற்கு ஈரானில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஓமனில் உள்ள ராடர் அமைப்புகளை அழித்ததாகவும், மனாமா நகரின் தெற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகளை தாக்கியதாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்தது. மேலும், பஹ்ரைனின் ஜுஃபைர் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகளைத் தாக்கியதாகவும் ஈரான் தரப்பு தெரிவித்தது.
