அமெரிக்கா தொடர்ந்து 7ஆவது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
உலகின் முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்து, அங்கு செல்லும் சரக்கு மற்றும் மசகு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் போட்டியாக அமெரிக்கா ஈரானைத் தாக்க, தற்போது ஈரான் வளைகுடா நாடுகள் மீது தனது பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இந்த ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இச்சம்பவத்தால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறன்றமைக் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தினோம். இதில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் பல சேதம் அடைந்தன. ஜோர்டான் மக்களும், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டும்.
சிரியாவில் அல்-டன்ஃப் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தையும் தாக்கினோம். ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவின் தாக்குதல் தொடரும் வரை, இங்கிருந்து எரிபொருள் கப்பல்கள் எதுவும் கடந்து செல்ல அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
