15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களை அணுகுவதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்துக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் சமரசக் குழு திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் புதிய கல்வியாண்டு ஆரம்பமாவதற்கு முன்பாகவே இந்தத் தடையை நடைமுறைக்குக் கொண்டுவர விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிசெம்பர் மாதத்தில், 16 வயதுக்குட்பட்டவர்கள் Facebook , ஸ்னாப்சாட் (Snapchat), பைட் டான்ஸின் டிக்டாக் (TikTok) மற்றும் ஆல்பபெட்டின் யூடியூப் (YouTube) போன்ற தளங்களைப் பயன்படுத்த உலகின் முதல் தடையை ஆஸ்திரேலியா அமுல்படுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாடும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற பகுதிகளிலும் இந்தத் தடைக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை மக்ரோன் மேற்கொண்டு வருகிறார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டெர் லெயன், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் முடிவுக்குச் சமீபத்தில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சமரச மசோதா கீழவையிலும், பின்னர் செனட் சபையிலும் விவாதிக்கப்பட உள்ளது.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு தடைசெய்யப்படவுள்ள சமூக வலைத்தளங்களின் பட்டியலை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வெளியிடுவார்.
இதனை நடைமுறைப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டின் தனியுரிமை ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘வயதைச் சரிபார்க்கும் அமைப்புகளை’ சமூக வலைத்தள நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.
இந்த சட்டமூலம் மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
