ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்றதுமுதல் தான் மிகக் குறைந்த நேரமே தூங்குவதாகப் பிரதமர் சனே தகைச்சி வெளியிட்ட தகவல், அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொது விடுமுறை வார இறுதியில் தனது நேரத்தை எப்படிச் செலவிட்டார் என்பது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட பிரதமர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு முதன்முறையாகத் தொடர்ந்து 5 மணி நேரம் முழுமையாகத் தூங்கினேன்” என்று எழுதியிருந்தார்.
வழக்கமாகத் தாம் ஒரு இரவில் 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், அதை ஒப்பிடும்போது இந்த 5 மணி நேர உறக்கம் ஒரு முன்னேற்றம் என்றும் திருமதி தகைச்சி குறிப்பிட்டுள்ளார்.
“வேலை நாட்களில் நான் எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குத் திரும்பும்போது, குளியலறையைச் சுத்தம் செய்தல், குளித்தல், இரவு உணவு, பாத்திரங்களைக் கழுவுதல், துணி துவைத்தல் மற்றும் சில சிறிய துப்புரவுப் பணிகளைச் செய்வதற்கே எனது சொந்த நேரம் முடிந்துவிடுகிறது” என்று அவர் எழுதியுள்ளார்.
அதனால் அதன்பிறகு அதிகாலை வரையிலான நள்ளிரவு நேரம், பிரதமர் அலுவலகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஆவணங்களைப் படிப்பதற்கும், பாராளுமன்றக் கேள்வி நேரத்திற்குத் தயாராவதற்குமே சரியாகிவிடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மீதமுள்ள ஓய்வு நேரத்தில் கைக்குட்டைகளை அயர்ன் செய்வதாகவும், துணிகளைத் துவைப்பதாகவும், கிழிந்த ஆடைகளைத் தைப்பதாகவும் தகைச்சி கூறியுள்ளார்.
நாட்டின் தலைவராக இருப்பதன் பணிச்சுமையைப் பற்றி அவர் இலகுவாகப் பதிவிட்ட இந்த எக்ஸ் பதிவு, ஜப்பானியக் குடிமக்களை அதிர்ச்சியடைய வைத்திருப்பதுடன், நாட்டின் மிகயுயர் பதவியில் இருப்பவருக்குத் தூக்கமின்மையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த தேசிய அளவிலான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
“அவர் இன்னும் அதிகமாக ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் யுய்சிரோ தமகி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“முக்கியமான முடிவுகளைத் தெளிவான சிந்தனையுடன் அவர் எடுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க, அவரது உதவியாளர்கள் அவருக்கு ஏன் கூடுதல் ஆதரவை வழங்கக்கூடாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
