சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில், கனடாவில் படித்து பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.
பணம் செலவு செய்து முறைப்படி கனடாவில் கல்வி கற்றும், தங்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், மாணவ மாணவியர் உண்ணாவிரதம் இருந்த சம்பங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதியில் அவர்களுக்கு வேலை செய்ய அனுமதி உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும்.
தாங்கள் கல்வி கற்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பணிபுரியத் தகுதியுள்ள மாணவர்கள், வகுப்புகள் நடைபெறும் நாட்களில் மட்டும், வாரத்திற்கு 24 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்யலாம்.
அனுமதிக்கப்பட்ட வேலை வரம்பை மீறுவது கனடாவில் ஒரு மாணவரின் மாணவர் நிலையை பாதிக்கலாம், எதிர்காலக் கல்வி அல்லது பணி அனுமதி விண்ணப்பங்களைப் பாதிக்கலாம், அத்துடன், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் கட்டாயப்படுத்தலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, சர்வதேச மாணவர்கள், தங்கள் கல்வி அனுமதியில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கவனத்தில் கொள்ளுமாறும், அவற்றை சரியாக பின்பற்றுமாறும் நினைவூட்டப்படுகிறார்கள்.
