உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி சென்ற விமானம் டிரோன் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பியதாக நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தெரிவித்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஜெலன்ஸ்கி மோல்டோவாவில் இருந்து நோர்வேக்கு விமானத்தில் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோல்டோவா தலைநகர் சிசினாவ் விமான நிலையத்தில் இருந்து ஜெலன்ஸ்கி சென்ற விமானம் புறப்படுவதற்கு முன்பு, அந்த நாட்டின் வான்பரப்பில் டிரோன் ஒன்று நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மோல்டோவா வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் ஜெலன்ஸ்கியின் விமானம் உள்பட பல விமானங்களின் பயணம் தாமதமானது.
இதுகுறித்து நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே கூறுகையில், “மோல்டோவாவில் இருந்து புறப்படத் தயாராக இருந்தபோது ஜெலன்ஸ்கியின் விமானம் டிரோன் ஒன்றால் தாக்கப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பியது” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், டிரோன் விமானத்திற்கு எவ்வளவு அருகில் வந்தது என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
மோல்டோவா அதிகாரிகளின் தகவலின்படி, ரஷ்யாவை சேர்ந்ததாக கருதப்படும் 2 டிரோன்கள் அந்த நாட்டின் வான்பரப்புக்குள் நுழைந்தன. அதில் ஒரு டிரோன் தலைநகர் அருகே உள்ள வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்தது. மற்றொரு டிரோன் ருமேனியா நோக்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜெலன்ஸ்கி சென்ற விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது என குறிப்பிட்டனர்.
