சிங்கப்பூரில் பூனைகளின் வீடுகளுக்குத் தீவைத்த முதியவருக்கு 3 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக் கட்டடங்களின் வெற்றுத்தளங்களில் அட்டையால் செய்யப்பட்ட குட்டி வீடுகள் பூனைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு அருகே தண்ணீரும் உணவும் அடிக்கடி வைக்கப்படுவதுண்டு.
பூனைகள் மட்டுமல்லாமல் பறவைகளும் தொந்தரவை ஏற்படுத்தும் பிராணிகளும் ஈர்க்கப்படுவதாக 68 வயது கோ தெங் பூ எண்ணினார்.
அதையொட்டிப் புகார் அளித்தாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று சொன்ன கோ, சினம் கொண்டார்.
அவர் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் பூனைகளின் வீடுகளை எரிக்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் வீடுகளை ஒரு தொட்டியில் வைத்து எரித்த அவர் பின்னர் வீடுகள் இருந்த இடத்திலேயே தீமூட்ட ஆரம்பித்தார். இதன்போது தரையும் சுவர்களும் சேதமடைந்தன.
அதற்கு ஜூரோங் – கிளமெண்டி – புக்கிட் பாத்தோக் நகர மன்றம் சுமார் 900 வெள்ளி செலவு செய்தது.
பொருள்களுக்குத் தீவைக்கும் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
