மலேசியாவில் வசித்து வரும் 5000 ரோஹிங்கியா அகதிகளுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அவர்கள் மீளவும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துன்புறுத்தப்பட்ட ரோஹிங்கியா சிறுபான்மையினரைச் சேர்ந்த 5,000 பேரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடந்த வாரம் அறிவித்தார்.
இது மனித உரிமை அமைப்புகளிடையே கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil), “ஒரு பொறுப்பான நாடு என்ற முறையில், அவர்கள் துன்புறுத்தப்பட்டாலோ அல்லது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ மலேசியா அவர்களைத் திருப்பி அனுப்பாது” என்று கூறினார்.
“மியன்மாரில் உள்ள இராணுவ ஆட்சிக்குழு அரசாங்கம் அவர்களைப் பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது, ஆனால் அதற்கான தகுதிகள் என்ன என்பதை நாங்கள் ஆராய்வோம். மேலும், அது பொருத்தமானதாக இருந்தால், திருப்பி அனுப்பும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்” என்றும் அவர் கூறினார்.
“அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், நாங்கள் அவர்களைத் திருப்பி அனுப்ப முடியாது. எனவே, வெளியுறவு அமைச்சகத்தால் பல விஷயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன என்றார்.
இருப்பினும் இது தொடர்பில் மியன்மார் அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.
