போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு உள்பட ஈரான் விதித்த நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது போரைத் தொடங்கியது. அப்போது முதலே, உலகின் முக்கிய எரிபொருள் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
மேலும், ஹோர்முஸ் நீரிணையை அனுமதியின்றி கடக்க முயன்ற கப்பல்கள் மீது தாக்குதல்களையும் ஈரான் நடத்தியது. அதேநேரம், வரும் காலங்களில் ஹோர்முஸை கடக்கும் கப்பல்களிடமிருந்து வரி வசூலிக்கவும் ஈரான் முடிவு செய்துள்ளது.
போரை நிறுத்தி இரு தரப்பினரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியதால் ஈரான் ஹோர்முஸ் மீதான பிடியை மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில், ஹோர்முஸ் தொடர்பாக ஓமனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஆனால், ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்படுவது அமெரிக்கா ஜூன் மாத ஒப்பந்தத்தை மீறியதற்கான இழப்பீடு வழங்குவது மற்றும் பிற நிபந்தனைகளுக்கு உட்படுவதைப் பொறுத்து அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகளை மறுத்த அவர், அவர்கள் இடைத்தரகர்கள் வழியே செய்திகளைப் பரிமாறிக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
ஈரான் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி முகமது பாகர் சுல்காதர் கூறுகையில், ஹோர்முஸை மீண்டும் திறப்பதற்கான கோரிக்கைகளில், ‘லெபனான், பலஸ்தீனம், ஏமன், ஈராக் போன்ற ஈரானின் நட்பு நாடுகளில் போர் நடவடிக்கைகளுக்கு முடுவு கட்டுவதும் அடங்கும்’ எனக் கூறினார்.
“எங்கள் நிபந்தனைகள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையை மூடப்படும். இது வெறும் நீர்வழிப் பாதை மட்டுமல்ல, உண்மையில் இது ஒரு போர்க்களம்” என்று ஈரான் புரட்சிகரக் காவல் படையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
