உலகின் பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த ஓராண்டில் மட்டும் தினமும் சராசரியாக சுமார் ரூ.8,312 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
‘பெஸ்ட் புரோக்கர்ஸ்’ நிறுவனம் ஃபோர்ப்ஸ் இதழின் பணக்காரர்கள் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 27 மற்றும் 2026 ஜூலை 27 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 320 பில்லியன் டொலர்கள் (சுமார் ரூ.30 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 12ஆம் திகதி ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட்டு (ஐபிஓ) பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, உலகின் முதல் மகா கோடீஸ்வரராக எலான் மஸ்க் உருவெடுத்தார். கடந்த மாதம் அந்த நிறுவனப் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்ததால், தற்போது அவரது சொத்து மதிப்பு 690 பில்லியன் டொலர்களாக உள்ளது.
எலான் மஸ்க் தவிர, மைக்கேல் டெல், லாரி பேஜ், செர்ஜி பிரின் மற்றும் டெதர் நிறுவனத்தின் ஜியான்கார்லோ தேவாசினி ஆகியோர் அதிக லாபம் ஈட்டியுள்ளனர். டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல், ஓராண்டில் 107.6 பில்லியன் டொலர்களைக் கூடுதல் லாபமாக ஈட்டி 2ஆம் இடத்தில் உள்ளார்.
‘டீப்சீக்’ நிறுவனர் லியாங் வென்ஃபெங்கின் சொத்து மதிப்பு 2025இல் 1 பில்லியன் டொலராக இருந்தது, 2026இல் அது 39.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது ஒரே ஆண்டில் 3,850% வளர்ச்சியாகும். இதன் மூலம் உலகின் டாப்-50 பணக்காரர்கள் பட்டியலில் அவர் இணைந்துள்ளார். பங்குச் சந்தை தற்காலிகச் சரிவைச் சந்தித்த போதிலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறை ஆதிக்கம், அவரது சொத்து மதிப்பை உச்சத்துக்கு எடுத்துச் சென்று உள்ளது.
