கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 290இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்து பெரும் பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில், கொலம்பியா பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் கொலம்பியாவின் புதிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள கொலம்பிய தொழிலதிபர்களுக்கும் வணிகர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், ஜூலை இறுதியில் 10%-லிருந்து 12.5%-ஆக உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகளைத் தற்காலிகமாகத் நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி எஸ்ப்ரியெல்லா கோரியுள்ளார்.
டிரம்புடனான 10 நிமிட உரையாடல் மிகவும் நட்புறவோடு அமைந்ததாகவும், நிலநடுக்கப் பாதிப்புகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்ப உள்ள சவால்கள் குறித்து விளக்கியதாகவும் எஸ்ப்ரியெல்லா தெரிவித்துள்ளார்.
பேரழிவுக்குப் பிந்தைய புனரமைப்புப் பணிகளுக்குச் சுமார் 6.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இப்போதைக்கு வரிகளை உயர்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என அந்நாட்டின் நிதி அமைச்சர் மிகேல் கோமஸ் தெரிவித்துள்ளார்.
