



வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து முருகப் பெருமான் வள்ளி – தெய்வானை சமேதரராக விநாயகப் பெருமானுடன் எழுந்தருளிய தருணம் அந்தணர்கள் வேதபாராயணம் முழங்க காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு தமது இஷ்டசித்திகளை வேண்டிக்கொண்டனர்.
தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 26ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா எதிர்வரும் செப்ரெம்பர் 07ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர்த் திருவிழா செப்ரெம்பர் மாதம் 09ஆம் திகதி காலையும், மறுநாள் 10ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கத்துடன், மகோற்சவம் நிறைவு பெறும்.
