உக்ரைன் இராணுவத்தின் டிரோன் தாக்குதல்களில் ரஷ்ய நிறுவனத்தின் 7 சரக்கு களஞ்சியங்கள் தீக்கிரையாகி உள்ளன. ரஷ்யாவில் வைல்ட்பெரிஸ் என்ற இ-கொமர்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இது அந்த நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் ஆகும். தலைநகர் மொஸ்கோ உட்பட ரஷ்யா முழுவதும் வைல்ட்பெரிஸ் நிறுவனத்துக்கு ஏராளமான களஞ்சியங்கள் உள்ளன.
மொஸ்கோ அருகே கெலிடினோ பகுதியில் உள்ள களஞ்சியம் மீது உக்ரைன் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரோன்கள் குண்டுகளை வீசின. இதில் அந்த களஞ்சியம் முழுமையாக தீக்கிரையானது. இதேபோல டெமோடிடெவோ, வினுகோவா உள்ளிட்ட இடங்களில் உள்ள வைல்ட்பெரிஸ் நிறுவன களஞ்சியங்கள் மீது டிரோன்கள் குண்டுகளை வீசின. ஒட்டுமொத்தமாக 7 களஞ்சியங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.
இதுதொடர்பாக மொஸ்கோ மாகாண ஆளுநர் ஆண்ட்ரே கூறும்போது, “டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “உக்ரைன் ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறோம். கடந்த ஒரு வாரத்தில் 1,550 டிரோன்கள் மூலம் உக்ரைனின் இராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.
போர் விமானங்கள் மூலம் 1,560 குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. 62 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. எங்களது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்துவோம். குறிப்பாக உக்ரைனின் ஆயுத உற்பத்தி ஆலைகள் தரைமட்டமாக்கப்படும்” என்று தெரிவித்தன.
