மலேசியாவில் கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த இருவரை காப்பாற்றுவதற்காகக் காவல் துறை நடத்திய அதிரடிச் சோதனையின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நேற்று இரவு மணி 8:40 அளவில் புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் அந்த வீட்டை முற்றுகையிட்டபோது, அங்கிருந்த சந்தேக நபர்கள் காவல் துறையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர்கள் சுட்டதைத் தொடர்ந்து, காவல் துறையினர் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் திரும்பச் சுட்டதில் இரு சந்தேக நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களிடம் எவ்வித அடையாள ஆவணங்களும் கண்டெடுக்கப்படவில்லை என புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவுத் தலைவர் டேத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில், கண்கள் கட்டப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் 70 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டுப் பெண் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்து ஒரு பெரெட்டா அரை-தானியங்கி துப்பாக்கி (5 தோட்டாக்கள்), ஒரு ரிவால்வர் துப்பாக்கி (4 தோட்டாக்கள்) மற்றும் ஒரு நீண்ட பாராங் கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கெடா, பினாங்கு மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் ஒரு மலேசிய ஆண், 4 வெளிநாட்டு ஆண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண் அடங்குவர்.
அவர்கள் அனைவரையும் தடுப்புக் காவலில் எடுக்க இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
